தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும்.

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தமிழ் மொழியின் தொன்மை
  3. தமிழ் மொழியின் சிறப்புகள்
  4. எளிமைச் சிறப்பு
  5. தமிழ் மொழியின் சிறப்புப் பெயர்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இலக்கியமும், இலக்கணமும் கொண்டு காலத்தை வென்று பல்வேறு நூற்றாண்டுகள் கடந்து இன்றும் இனிமை குறையாமல் கற்போர் நெஞ்சத்தை நெகிழச் செய்யும் அருந்தமிழ் சிறப்பினை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

தமிழின் சிறப்பைப் போற்றி பாடியவர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்கா. “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் கூறுகின்றார். இத்தகைய தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தமிழ் மொழியின் தொன்மை

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழ்மொழி மிக நீண்ட நெடிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது.

உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்தொழிந்தன என மொழியியல் அறிஞர்கள் கருத்துத்துரைத்துள்ளனர். கால மாற்றத்திற்கேற்ப புத்தம் புது மொழிகளும் தோன்றி வளர்ந்து வருகின்றன.

இவ்வாறு தோன்றி மாயும் மொழிகளுக்கிடையே, மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளர்ந்து, இன்றளவும் வாழ்ந்து தமிழ் மொழி வளர்ந்து நிற்கின்றது.

தமிழ் மொழியின் சிறப்புகள்

பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளமுடையதாய் நிற்பதோடு புதுமைக்கும் புதுமையாய் கருத்துச் செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது நமது தமிழ் மொழியாகும்.

உயர்தனிச் செம்மொழி தமிழாகும். உலகிலேயே மொழிக்கென முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது தமிழ்ச் சங்கமே.

இந்திய அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகள் 14 மட்டுமே. அவற்றில் தமிழும் ஒன்று. தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழ் மொழி சிறந்து விளங்குகின்றது. தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடிய மொழியாகும்.

எளிமைச் சிறப்பு

தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது.

தமிழ் ஓர் எழுத்துக்கும், ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே.

தமிழ் மொழியின் சிறப்பு பெயர்கள்

  • செந்தமிழ்
  • பைந்தமிழ்
  • அருந்தமிழ்
  • நறுந்தமிழ்
  • தீந்தமிழ்
  • முத்தமிழ்
  • ஒண்டமிழ்
  • தண்டமிழ்
  • வண்டமிழ்
  • தெளிதமிழ்
  • இன்றமிழ்
  • தென்றமிழ்
  • நற்றமிழ்
  • தெய்வத்தமிழ்
  • மூவாத்தமிழ்
  • கன்னித்தமிழ்

என பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

முடிவுரை

தமிழ் இனிய மொழி இலக்கிய, இலக்கணச் சிறப்புடைய மொழி. தொன்மையான மொழி. இத்தகைய தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டுமானால் பிறநாட்டிலுள்ள சிறந்த அறிஞர்களின் நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதவேண்டும், மேலும் புகழ் தரக்கூடிய புதிய நூல்களைப் படைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் பாரதி.

பாரதியின் இத்தகைய வேண்டுகோளை நாம் நிறைவேற்ற வேண்டும். நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை அதன் சிறப்புக்கள் மங்காது என்றும் பேணிக்காப்பது நம் அனைவரது தலையாய கடமையாகும்.