இலங்கை விமான படையில் சேர முண்டியடிக்கும் யாழ் இளைஞர்கள்!

இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எயர் டட்டூ 2024’ கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியின் போதே இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கை விமானப்படை கடந்த மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ‘எயர் டட்டூ 2024’ கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடத்தியது.

கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு

இந்தக் கண்காட்சியானது ஒரு திருப்புமுனையாக விடயமாக அமைந்தது மாத்திரமன்றி, இது விமானப்படைக்கும் யாழ்ப்பாண சமூகத்திற்கும் இடையிலான உறவுகளில் ஒரு சாத்தியமான போக்கையும் உருவாக்கியுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வானது கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான களமாக அமைந்தது மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் இளைஞர்களிடமிருந்து விமானப்படையின் மீதான ஆர்வத்தை புதுப்பித்ததையும் காணக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் அதிபர் செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க கண்காட்சியின் இறுதி நாளான நேற்று (10) கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இந்த திட்டத்தை கருத்தில் கொண்டு விமானப்படை ஆட்சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்தியதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 250 இளைஞர்கள் விமானப்படையில் சேர விண்ணப்பித்ததாகவும் கூறினார்.