இந்தியாவிடம் இருந்து மாலைதீவுக்கு பாரிய இழப்பு!

இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ளது.

மாலைதீவு சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாலைதீவுக்கு வருகை தந்துள்ளனர். அதில் 2,09,198 பேர் இந்தியர்கள். ரஷ்யர்கள் 2,09,146 பேரும், சீனர்கள் 1,87,118 பேரும் வருகை தந்துள்ளனர். இதன்மூலம் மாலைதீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்தது.

ஆறாவது இடத்திற்கு சரிவு

ஆனால், இந்த ஆண்டு இந்தியா ஆறாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த ஆண்டில் மார்ச் 2-ம் திகதி நிலவரப்படி இந்தியாவில் இருந்து 27,224 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக மாலைதீவு சுற்றுலா அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியர்களின் வருகை குறைந்து வருவாய் சரிந்ததால், மாலைதீவு சுற்றுலாத் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்மறை விளைவுகளை

இந்திய பயணிகள் வருகை குறைவதால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளை சுற்றுலாத்துறை வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

1.8 பில்லியன் டொலர் முதல் 2 பில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படும் என்று சிலர் கணித்துள்ளனர். இந்திய பயணிகளின் வருகையை நம்பியிருக்கும் டிராவல் ஏஜென்சிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் தங்களின் வருவாய் 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.