கொழும்பில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்,அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் அந்த தங்கக் கடைகளில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். 

தங்க நகை திருட்டு

காத்தான்குடியைச் சேர்ந்த அஹமது முஹ்யித்தீன் உமர் ஹாசிம் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.