நாட்டு மக்களுக்கான அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்திற்காக நடத்தப்படும் பல்வேறு தள்ளுபடி விற்பனையின் போது பொதுமக்கள் ஏமாற்றப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

காலாவதியான பொருட்கள் விற்கப்பட வாய்ப்பு

மேலும் தெரிவிக்கையில், பொருட்களுக்கு தள்ளுபடி மற்றும் பேரம் பேசும் இடங்களில் காலாவதி திகதியை திருத்தம் செய்வதன் மூலம் காலாவதியான பொருட்கள் விற்கப்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொருட்களின் தரத்தை ஆராயுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் விற்பனையாளர்களால் பதுக்கல், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை திருத்தப்பட்ட காலாவதி திகதிகளின் கீழ் விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுக்க தொடர் சோதனை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொருட்களை வாங்கும் போது இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பொதுமக்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.