இந்திய இலங்கை கடற்தொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி!

கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு விரைவில் கூடும் என சென்னை மேல் நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டு பணிக்குழுவின் ஆறாவது கூட்டத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியா இரண்டு திகதிகளை இலங்கைக்கு முன்மொழிந்தது. ஆனால் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக இலங்கை அதில் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் விரைவில் கூட்டத்தை நடத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் 

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்து அவர்களுக்கும் படகுகளுக்கும் சேதம் விளைவிப்பதாக முறையிட்டு தனியார் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் எதிர் பிரமாணப் பத்திரத்தில் இந்த சமர்ப்பணங்கள் இந்திய கடற்றொழில் அமைச்சினால் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி செயலாளர் மட்டத்தில் பணிக்குழு அமைக்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நடத்துவது என்றும் இருநாட்டு கடலோர கடற்படையினர் இடையே அவசர தொலைத்தொடர்புகளை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முடிவுகளுக்கு இணங்க, 2017 ஜனவரி 2இல் கொழும்பிலும், அக்டோபர் 14இல் புதுடெல்லியிலும் இரண்டு சுற்று அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது, இந்தியத் தரப்பு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதி, கைப்பற்றப்பட்ட கடற்றொழில் படகுகளை மனிதாபிமான அடிப்படையில் விரைவாக விடுவித்து தருமாறு இலங்கை தரப்பிடம் கோரிக்கை விடுத்தது.

சர்வதேச கடல் எல்லை

இந்த நிலையில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டில் தமிழக அரசின் பாரம்பரிய கடற்றொழிலாளர்களுக்கு 750 ஆழ்கடல் கடற்றொழில் படகுகளை கொள்முதல் செய்ய உதவியாக தமிழக அரசுக்கு மத்திய அரசு 300 கோடி ரூபாயை அளித்தமையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கடலோரக் கடற்படையானது இந்திய கடற்றொழிலாளர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டுவதைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் இந்திய கடற்றொழில் துறை சென்னை மண்டல இயக்குநர் ஏ.டைபர்டியஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இந்த சமர்ப்பணத்தை அடுத்து நீதிபதிகள் பொதுநல மனுவை ஜூன் 11ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.