முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் மீது வழக்கு பதிவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜிவ சேனசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரீஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதை அறிந்து அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1,843,267,595 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இது தொடர்பான முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.