ரோமியோ திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனி படம் என்றாலே கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் ரோமியோ.

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாங்க படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்
மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள்.

சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மிர்னாலினி ரவியை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், மிர்னாலினி ரவிக்கு இந்த திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

இதன்பின் தனது மனைவிக்கு தன் மேல் காதல் இல்லை, விருப்பம் இல்லை என விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர் என்ன செய்தார்? கடைசியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது. குறிப்பாக எமோஷனல் காட்சிகள் மற்றும் மனைவியிடம் சகித்துக் கொண்டு இருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார் விஜய் ஆண்டனி.

கதாநாயகி மிர்னாலினி நடிப்பில் குறை எதுவும் இல்லை. முழு கதையும் அவரை சுற்றியே நகர்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சியிலும் கச்சிதமாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த நடித்த நடிகர், நடிகைகளும் திரைக்கதையோடு ஒன்றி போகிறார்கள்.

மனதை தொடும் கதைக்களத்தை, அழகாக எடுத்து கூறியுள்ளார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு, இன்னும் கூட படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

மற்றபடி படத்தில் குறை என்று பார்த்தால் சில பாடல்களை தவிர்த்து இருக்கலாம் என்பது தான். பாடல்களை வைத்து காட்சி அமைத்தது என்பது அருமை. ஆனால் அதுவே சில இடங்களில் மைனஸ் பாயிண்டாகவும் அமைந்துவிட்டது. பின்னணி இசை வேற லெவல். படத்திற்கு பலம் சேர்க்கிறது. ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் அருமையாக இருந்தது.

பிளஸ் பாயிண்ட்

விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி நடிப்பு

கதை

ப்ரீ கிளைமாக்ஸ்

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு

மொத்தத்தில் ரோமியோ ரசிகர்கள் அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டான்..