இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில்

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் கப்பல்சேவை ஆரம்பித்து தொடரவுள்ளது.

அந்த வகையில் மீளவும் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனம் தெரிவித்துக்கொள்கின்றது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது.

இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும்.

அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.

எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் மாதந்தோறும் 72 இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல் சேவை சாத்தியமாகியுள்ளது.

அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார்.