கனடாவில் கைதானவர்கள் பற்றிய விபரங்களுக்காக காத்திருக்கும் இந்தியா

 கனடாவில் அண்மையில் கைதான இந்தியர்கள் தொடர்பிலான தகவல்களுக்காக காத்திருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜாரின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகள் தொடர்பில் கனடிய அதிகாரிகளின் தகவல்களுக்காக காத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் பற்றிய விபரங்களை அதிகாரபூர்வமாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.

இந்த கைதுகள் கனடாவின் உள்விவகாரம் எனவும் இந்த விடயத்தில் கருத்து வெளியிடப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மீகத் தலைவர் நிஜாரின் படுகொலையில் இந்திய அரசாங்கம் தொடர்புபட்டிருப்பதாக கனடா குற்றம் சுமத்தியிருந்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் பாரிய இராஜதந்திர முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.