மைத்திரிக்கு எதிராக முறைப்பாடு!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் (SLFP) முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர (Montegue Sarachchandra), இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியிருக்கலாம் என சந்கேம் எழுந்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
எனவே குறித்த பணம் எப்படி ஈட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி அவர் இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு நீதிமன்றம், மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவிட்டது.

இதன்படி ஒன்றரைக் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பணத்தை செலுத்த தம்மிடம் வசதி இல்லை எனவும், எனவே அதனை பகுதி பகுதியாக செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் தருமாறு மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.

3 கோடி ரூபாய்
இவ்வாறு கோரிய நிலையில், கடந்த 13 ஆம் திகதி சுமார் 3 கோடி ரூபாய் (28 மில்லியன்) செலுத்தப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

எஞ்சிய பணத்தை செலுத்த 10 வருடங்கள் காலவகாசம் கோரியிருந்த நிலையில் திடீரென இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அந்தப் பணம் ஈட்டப்பட்ட விதம் தொடர்பில் ஆராயுமாறு மொன்டேகு சரச்சந்திர, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.