தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடித்த இந்தியா..!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்க இந்திய அரசாங்கம் (Government of India) தீர்மானித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கருதுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக பிரசாரம்
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், குறித்த ஆதரவாளர்கள், இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அந்த அமைப்பு மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.