இலங்கையில் பாகிஸ்தான் பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை!

போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2020 ஜனவரி 1 ஆம் திகதி அன்று பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் 614 கிலோ 36 கிராம் ஐஸ் மற்றும் 581 கிலோ  34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

அந்த போதைப்பொருட்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த பொதிகளில் 900 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு மேற்கொள்ளப்பட்ட போது, ​​குறித்த பாகிஸ்தானிய பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.