முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி
நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.