பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் மீண்டும் பிரித்தானியா செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடுகடத்தப்பட்ட 41 வயதான நபர் இலங்கைத் தமிழர், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.

நிறுவனம் ஒன்றில் சட்டவிரோதமாக பணி புரிந்ததாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொண்டதையடுத்து அவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

தனது மனைவி, மகன், மகள் ஆகியோரை பிரிந்தே அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், புலம்பெயர்தல் தீர்ப்பாயம் ஒன்று அவரை பிரித்தானியா திரும்பலாம் என தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும், உள்துறைச் செயலகம், அவர் பிரித்தானியா திரும்புவதற்கான விசா நடைமுறைகளை பல மாதங்களாக தாமதப்படுத்திவந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பின்னர் மனித உரிமைகள் சட்டத்தரணி ஒருவர் உள்துறை அலுவலகத்தில் தாமதத்துக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர், இம்மாத ஆரம்பத்தில் அவர் பிரித்தானியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் தான் தங்கியிருந்த வீட்டில் சுயநினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளார்.