உலக நாடுகளின் முழு கவனமும் இந்தியா பக்கம்!

இந்தியாவின் (India) 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சி வெற்றி பெரும் என்னும் கேள்வியில் உலக நாடுகளின் முழுக்கவனமும் இன்று இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய மக்களவைத் தேர்தல் தொடர்பில் பலதரப்பட்ட தரப்பினரால் கருத்துக்கணிப்புக்களும் தகவல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, 2024 மக்களவைத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் நடக்கப்போகும் மாற்றங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொங்கு நாடாளுமன்றம்
வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்புக்களில் மூன்றை தவிர ஏனைய கருத்துக்கணிப்புக்கள் பாரதீய ஜனதா கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன.

எனினும், எந்த கட்சியும் அல்லது கூட்டணியும் 272 தொகுதிகளில் தமது வெற்றியை பதிவு செய்யாது போனால், என்ன மாற்றங்கள் நிகழும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

அதாவது, தொங்கு நாடாளுமன்றம் என்ற நிலை உருவானால், என்ன நடக்கக்கூடும் என்பதே பெரும் கேள்வியாகும்.

அதற்கு பதில்களாக, பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் எந்த கட்சிக்கு தனிப்பட்ட அளவில் அதிக இடங்கள் உள்ளதோ அந்த கட்சியை ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் அழைக்கலாம்.

கட்சி தாவல்கள்
அத்துடன், அந்த கட்சியை குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரலாம். பெரும்பாலும் இதில் பாரதீய ஜனதாக்கட்சிக்கே வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும், சில வேளைகளில் பாரதீய ஜனதாவுக்கு தனிப்பட்ட அளவில் அதிக இடங்கள் இருந்தும் பெரும்பான்மை இல்லாதுபோனால், அந்த கட்சியை குடியரசுத் தலைவர் ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றால். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் உரிமையை கோரலாம்.

தொங்கு நாடாளுமன்ற நிலை உருவானால் பிரதான அரசியல் கட்சிகள், மாற்று கட்சிகளில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான புதியவர்களை தங்களுடன் சேர்த்து கொள்வதற்கான களத்தில் இறங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

அதாவது, கட்சி தாவல்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இதன்போது, பிராந்திய கட்சிகளுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். அந்த கட்சிகள் தமது நிபந்தனைகளை முன்வைத்து ஆட்சியமைக்க உதவி செய்யும் நிலை ஏற்படும் என கருத்து கணிப்புக்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.