பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரக்கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில் வீட்டிலிருந்தவர்கள் வீடினை பூட்டி சாவியை வீட்டில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டுக்குவந்து பார்த்தபோது வீட்டின் படுக்கையறையிலிருந்த கபட் உடைக்கப்பட்டு அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

வீட்டின் மதில் பகுதியினால் பாய்ந்துவந்து மறைத்து வைத்திருந்த சாவியினை எடுத்து வீட்டிற்குள் சென்று இந்த துணிகர கொள்ளைச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஆலயத்திற்கு சென்றுவரும் நேரம் கவனிக்கப்பட்டு இந்த கொள்ளைச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.