கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரிப்பு!

கனடாவில்(Canada) வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கனடாவில் மே மாத வீட்டு வாடகை குறித்து இந்த தகவல் வெளியாகியுள்ளதோடு, வீட்டு வாடகை தொகை சராசரியாக 2202 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சராசரி வாடகை தொகை

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகையானது 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.6 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கனடாவில் சராசரி வாடகை தொகை முதல் தடவையாக 2200 டொலர்களை தாண்டி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை சராசரியாக 1927 டொலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 2334 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.