கிளிநொச்சியில் மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்!

    கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் பயணிப்பதால் மாணவர்கள் பொலிஸ் வாகனத்தில் பாடசாலை சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் நேரத்தோடு வந்து பாடாசலை செல்ல பேருந்து தரிப்பிடத்தில் காத்துநின்றபோதும், தொடர்ச்சியாக பேருந்துகள் மாணவர்களை ஏற்றி செல்லாத சம்பவம் பதிவாகி வருகின்றது.

இந் நிலையில், இன்றைய தினம் பொலிசார் தமது வாகனத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்று பாடசாலையில் விட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த சில மாதங்களிற்கு முன்னர், பெற்றோர் ஒருவர் பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றி அனுப்பிய சம்பவமும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.