விவசாயிகளுக்கு வரும் விசேட வேலைத்திட்டம்!

பெலியத்தையிலிருந்து (Beliatta) மருதானைக்கு (Maradana) தொடருந்தில் விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்லும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) தெரிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 29ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானைக்கு விவசாயப் பொருட்களை தொடருந்தில் ஏற்றிச் செல்லும் முன்னோடி திட்டமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை உலக வங்கியின் (World Bank) உதவியுடன் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் முறையைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செயலி மூலம் முன்பதிவு செய்தல்
மேலும் விவசாய போக்குவரத்து வசதிகளுக்காக தொடருந்தை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு செயலி மூலமாகவும், தொலைபேசி அவசர அழைப்பை பயன்படுத்தியும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்களது விவசாயப் பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அறுவடைக்குப் பின் ஏற்படும் சேதங்களை குறைக்கவும், போக்குவரத்து கட்டணத்தை குறைக்கவும் முடியும் என தொடருந்து திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.