தமிழர் பகுதியில் சோகம் தீக்கிரையான வீடு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த வீடானது நேற்று( 30.06.2024) திடீரென தீ பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரிந்துள்ளது.

இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தீக்கிரையான வீட்டில் வசித்தவர்கள் இடமின்றி அயலவர் வீட்டில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேலும் தமக்கென நிரந்தர வீடு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவ்வீட்டினை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், இருப்பதற்கோர் இடமின்றி தற்காலிக வீடு ஒன்றை அமைத்து வசித்து வந்ததாகவும் தற்பொழுது அதுவும் தீயில் எரிந்து இல்லாமல் போய் உள்ளதாகவும் வீட்டார் கவலை தெரிவித்துள்ளார்.