மின் கட்டண குறைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையினால் இவ்வருடம் இரண்டாவது தடவையாக முன்மொழியப்பட்டுள்ள மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மின் கட்டணத் திருத்தம் குறித்து ஆர்வமுள்ளவர்கள் ஜூலை 7ஆம் திகதிக்கு முன்னதாக ஆணையத்திற்கு கடிதம் எழுதி, ஜூலை 9ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுமக்களின் எழுத்து மூலமான கருத்துக்கள்
இந்த பிரேரணை தொடர்பில் பொதுமக்களின் எழுத்து மூலமான கருத்துக்கள் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் பெற்றுக்கொள்ளப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இறுதி முடிவு
மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக மின்சார சபையினால் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்டண திருத்த யோசனை தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி முடிவு ஜூலை 15 ஆம் திகதி பொதுமக்களின் ஆலோசனைக்குப் பின்னர் வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.