வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை  மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதி வழியாக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, ஹெடஓயாவை அண்மித்த பகுதிகளில் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை நீக்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருகின்றது.

இதன் காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டால், முன்னறிவிப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.