அரசியல் ஓய்வு குறித்து மகிந்தவின் அறிவிப்பு!

அரசியல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், அரசியலை விட்டு இலகுவில் விலகப் போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றையதினம் (16) முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல்

இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 3.14% வீதத்துடன் 350,429 வாக்குகளைப் பெற்று தேசியப் பட்டியல் ஆசனத்துடன் 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தேசியப்பட்டியல் தொகுதிக்கான நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஏனைய இரண்டு ஆசனங்களுக்கு அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் டி.வி.சானக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், சானக மதுகொட காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில்தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச சென்ற நபரால் பரபரப்பு!

வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதுடன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

நேற்று மாலை நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன், அந்த பகுதி கமக்காரர் அமைப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கமக்கார்ர் அமைப்பினர் மற்றும்  பொதுமக்கள் விடயம் தொடர்பாக வவுனியா பொலிசார் மற்றும் சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த நபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மலர்சாலையின் உரிமையாளர் வரும் வரையில் வாகனத்தை நகரவிடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அகன்று சென்றனர். இதேவேளை குறித்த கழிவுகளை வவுனியா கண்டி வீதிக்கு அண்மையில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் இருந்தே எடுத்து வந்ததாக அதனை கொண்டுவந்த நபர் பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் அவர் கொண்டுவந்த கழிவுப்பொதிகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். 

இலங்கை வரும் சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார்.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அவர் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய ராசிபலன்கள் 17.11.2024

மேஷம்:

அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கினால் வெற்றி கிடைக் கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய் வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக்காது. குடும்பத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மாலையில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:

அனுகூலமான நாள். ஆனாலும், புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். காலையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். வீட் டில் பராமரிப்புப் பணிகள் அதிகரித்தாலும், சலித்துக்கொள்ளாமல் செய்வீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். குடும்பப் பெரியவர்களின் பாராட்டுகள் உற்சாகம் தரும். நண்பர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர் பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கடகம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ் நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

சிம்மம்:

இன்று புதிய முயற்சி எதிலும் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

கன்னி:

காலையில் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாக மாகக் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற சற்று அலையவேண்டி இருக்கும். அதன் காரணமாக உடல் அசதியும் மனச்சோர்வும் ஏற்படும். ஆனால், வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரை யைக் கேட்டு அதன்படி நடந்துக்கொள்வார்கள். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகு கிடைத்துவிடும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

உற்சாகமான நாள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைக ளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். குடும்பம் தொடர்பான முடிவுகள் எதுவும் இன்று எடுக்கவேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மகரம்:

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவு கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கூடுமானவரை விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாகச் சற்று அசதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

கும்பம்:

இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை மிகவும் அவசியம். புதிய முயற்சிகளை காலையி லேயே தொடங்கிவிடுவது நல்லது. மற்றவர்கள் கோபத்தில் பேசினாலும், நீங்கள் பொறுமையுடன் இருக்கவேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முயற்சிகளைக் காலையில் தொடங்குவது சாதகமாக முடியும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

மீனம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு ஆடை, ஆபர ணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ் நிலை ஏற்படும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர் பார்த்த பண உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தேசிய பட்டியல் ஊடாக செல்லும் 18 உறுப்பினர்கள்

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேரத்லில் தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் 18 உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.

பிமல் ரத்நாயக்க – ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர், தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

கலாநிதி வசந்த சுபசிங்க – களனி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

கலாநிதி அனுர கருணாதிலக்க – களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

பேராசிரியர் உபாலி பன்னிலகே – ருஹுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

எரங்க உதேஷ் வீரரத்ன – தகவல் தொழில்நுட்ப பொறியாளர் தகவல் தொழில்நுட்பத்தில் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினர்

அருணா ஜெயசேகர – ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படைகள் மன்றத்தின் தலைவர்

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும – நிறுவன இயக்குனர் தேசிய மக்கள் அதிகாரத்தின் பொருளாதார கவுன்சில் உறுப்பினர்

ஜனித ருவன் கொடித்துவக்கு – உதவி கடற்படை பொறியாளர் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் தேசிய மக்களின் பொறியியல் மன்றம்

புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி – பொறியாளர் திட்ட மேலாளர் தேசிய மக்கள் அதிகாரத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர்

ராமலிங்கம் சந்திரசேகர் – இலங்கை நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மக்கள் அதிகாரம் மற்றும் யாழ் மாவட்ட அமைப்பாளர்

கலாநிதி நஜித் இந்திக்க – சமூக ஆர்வலர் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர்

சுகத் திலகரத்ன – ஒலிம்பியன் லக்மாலி ஹேமச்சந்திர தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் .

சட்டத்தரணி சுனில் குமார கமகே – பட்டய கணக்காளர் காமினி ரத்நாயக்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுதந்திர வர்த்தக மண்டல தொழிலாளர்களுக்கான தேசிய மையத்தின் அழைப்பாளர்

பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி ஊவா மாகாண சுற்றுலா சபையின் தலைவர்

சுகத் வசந்த டி சில்வா – சமூக சேவை அதிகாரி (ஓய்வு) இலங்கை பார்வையற்ற பட்டதாரிகளின் சபையின் தலைவர் கீர்த்தி வலிசரகே வழிகாட்டிக் குழுவின் உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி

தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றிற்கு பிரவேசிக்கும் நாமல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாமல் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித தகவல்கள் கூறுகின்றது.

இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் அடித்துக் கொலை!

அத்துமீறி வீட்டினுள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சாலியவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை (15) சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாய 07 பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர்கள் பொல்லினால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

நேற்றிரவு முன்தினம் இரவு (14) மதுபான விருந்து ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அதில் பங்கேற்றிருந்த இருவர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாலியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 23 மற்றும் 24 வயதுடைய இரு சந்தேகநபர்களே இந்த குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியலில் இருந்து ஓய்வு பெறும்

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது சேவை கண்டி மாவட்ட மக்களுக்கு இனி தேவையில்லை என்பதை இம்முறை நடைபெற்ற பொதுத்தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதனால் தான் அரசியலில் இருந்து விலக முடிவு செய்ததாக அவர் மேலும் கூறினார்.

“கண்டி மாவட்ட மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறேன். அதன்படி, அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். என்னை அரசியலுக்கு அழைத்து வந்த அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். “

நாடாளுமன்றம் செல்லும் 8 மலையக தமிழர்கள்!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட உள்ளதுடன், 17.1 மில்லியன் மக்கள் இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

மலையகத் தமிழர்கள்
இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா (Nuwara Eliya), பதுளை (Badulla), இரத்தினபுரி (Ratnapura) ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி 33346 வாக்குளை பெற்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) 46,438 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பழனி திகாம்பரம் (Palani Digambaran) 48018 வாக்குளை பெற்றும், வே.இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan) 42,273 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

தேசியப் பட்டியல்
பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிட்ணன் செல்வராஜ் 60041 வாக்குளை பெற்றும் அம்பிகா சாமுவேல் 58201 வாக்குகளை பெற்றும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதுபோன்று இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சுந்தரலிங்கம் பிரதீப்பும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

தேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள ராமலிங்கம் சந்திரசேகரனும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினால் மொத்தமாக 8 மலையக எம்.பிகள் இம்முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவர்.