கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய லொறி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் தெலிஜ்ஜவில கிரிமெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், காலி பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ரயிலுக்கான சமிஞ்ஞை ஒளிரும் வேளையில் ரயில் வருவதாக அருகில் இருந்தவர்கள் எச்சரித்ததையும் மீறி லொறி ரயில் கடவையின் ஊடாக செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதியான 34 வயதான நபரும் அவரது 80 வயதான தாத்தாவுமே உயிரிழந்தனர் விபத்தில் காயமடைந்த உயிரிழந்த சாரதியின் 01 மற்றும் 07 வயதுடைய இரு பிள்ளைகள், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் தாயார் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 வயதான மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மோட்டார் சைக்கிள் ஒன்று, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) பிற்பகல் ஹபரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபரணை பெல்லங்கடவல கிளை வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கினிஹிரிகம, கெக்கிராவ பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் பறிபோன தமிழர் பிரதிநிதித்துவம்!

கொழும்பில் பாராளுமன்றத்திற்கான தமிழர் பிரிதிநித்துவம் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிவிட்டுள்ள அவர், தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆட்சி  அமைக்கும் அனுர அரசுக்கும் வாழ்த்துக்கள்!

நாட்டின் தேசிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற நிகழ்வுகள் நடக்கும் கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், தமிழர் பிரதிநிதித்துவத்தை இரட்டிப்பு ஆக்க நமது கட்சி எடுத்து கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. 

இன்று இருந்து ஒரு தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போய் விட்டது.

பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒவ்வொரு இனமும் தமது  பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து கொள்வது, அதிகரிப்பது, இயல்பான ஜனநாயக செயற்பாடுகளாகும். 

ஆனால், கொழும்பு தலைநகர் மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அது இன்று சாத்திய படவில்லை. 

2010ம் வருடம் கண்டி மாவட்டத்து தமிழர் பிரதிநிதித்துவத்தை பெற நான் ஒரு கட்சி தலைவராக மேற்கொண்ட முயற்சியின் போது, இத்தகைய ஒரு “வெற்றி பெறாமை” என்ற சூழலை எதிர் கொண்டேன். 

பின்னர் நான் சாம்பலில் இருந்து எழுந்து வந்தேன். அது வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர் தம்பி லோஷன் புதிய அனுபவங்களை கற்று கொண்டார். கடும் முயற்சியாளர், சமூக பற்றாளரான அவருக்கு எனது பாராட்டுகள்! 

கொழும்பு தலைநகர் மாவட்டத்தில், இருந்த தமது இரண்டு பிரதிநிதித்துவங்களை தக்க வைத்து கொண்டு, இன்று அதை மூன்றாக அதிகரித்தும் கொண்ட, தமிழ் பேசும் சகோதர முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு எனது இதயபூர்வ பாராட்டுகள்!
எமக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஏ.ஆர்.வி.லோஷன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்களால் வெற்றிபெற முடியாமல் போயுள்ளது.

நான் பாராளுமன்றம் செல்லப் போவதில்லை!

மக்களால் நிராகரிக்கப்பட்ட தாம் தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “எங்களை விட்டு விலகி தனித்துச் சென்றவர்களுக்கு எந்தவிதமான ஆணையையும் கொடுக்காமல் தமிழரசுக் கட்சிக்கு வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அதற்காகத் தமிழரசுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.”

“மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை.”

“நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்திக்கு எங்களது வாழ்த்துதல்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுவொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்தப் பிரதிநிதித்துவ முறைமை வந்த பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தனித்து ஒரு கட்சி எடுப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கின்றது.

உண்மையைச் சொல்லப்போனால் தேர்தல் முடிவுகளோடு எந்தக் கட்சிக்கும் இப்படியான பெரும்பான்மை கிடைத்தது இல்லை. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வித்தியாசமான தேர்தல் முறையிலே ஆறில் ஐந்து பெரும்பான்மை ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசுக்குக் கிடைத்திருந்தது.

அப்படியான ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்ற அடிப்படையிலும் தான் இந்தப் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த கையோடு மஹிந்த ராஜபக்ஷ கூட தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருக்கவில்லை.

அதற்குப் பின்னர் கட்சி மாறல்கள், கட்சித் தாவல்கள் ஊடாகத்தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

ஆனால், இந்தத் தடவை மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பதற்கும் அப்பால் சென்று 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கின்றது.

இது உண்மையில் வியத்தகு வெற்றி. அப்படியான வெற்றியை ஈட்டியவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதில் இன்னொரு விடயமாக கடந்த பாராளுமன்றத்திலே மூன்றே மூன்று ஆசனங்களை வைத்திருந்த தேசிய மக்கள் சக்தி இந்த பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைத் தனித்துப் பெற்றிருப்பது இன்னொரு சாதனை.” – என்றார்.

கறி சோற்றை மிஞ்சும் சுவையில் தக்காளி சாதம் அருமையான டிப்ஸ்

கறி சோறு சுவையினை மிஞ்சும் அளவிற்கு தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரியாணி குருணை – 300 கிராம்
தக்காளி- அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா – ஒன்றரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
முழு கரம் மசாலா – 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு கடலை எண்ணெய் – தேவையான அளவு
பட்டை, கிராம்பு – தாளிக்க

செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு இவற்றினை சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பச்சைமிளகாய் மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் மிக்ஸியில் அரைத்து விழுதாக வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தொடர்ந்து அனைத்து மசாலாவினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு வந்ததும், தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்ததும், அரிசியை சேர்க்க வேண்டும். பாதி வெந்த பின்பு தம் போட்டு சிறிது நேரம் வைத்திருக்கவும். கடைசியாக தக்காளி சாதம் பிரியாணி சுவையில் தயாராகியும் இருக்கும்.

இதனை முட்டை, தயிர் வெங்காயம் வைத்து சாப்பிட்டால், நிச்சயமாகவே கறி சாப்பாடு தோற்று போய்விடுமாம்.

நாட்டின் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை!

உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பதானது, நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்படுவதற்கான அறிகுறியாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தொடர்தும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஒக்டோபரில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

இதன்படி, கடந்த செப்டெம்பர் மாதம் 5994 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்புத் தொகை, கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் 6467 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.இந்த சூழ்நிலையின் அடிப்படையில் ரூபாயின் மதிப்பை நிலையானதாக வைத்திருக்க முடியும்.நாட்டில் நிலவும் நிதி நிச்சயமற்ற தன்மை படிப்படியாக குறையும், தற்போது, ​​நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் வெளிநாட்டு கடனை செலுத்த வேண்டியிருக்கும், அத்தகைய கடன்களை செலுத்துவதற்கு நாட்டில் நிதி ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியமானது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

நான்கு ஆசனங்களை இழந்த தமிழரசுக் கட்சி!

நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிருந்தது. அவ்;வகையில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெற்று தமிழரசு கட்சிக்கு மொத்தமாக ஏழு ஆசனங்களுடன் ஒரு தேசிய பட்டியல் ஆசனமுமாக எட்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வடக்கு மக்களின் நிராகரிப்பால் 4ஆசனங்களை இழந்த தமிழரசுகட்சி | Tamil Rasukatsi Lost 4 Rejection Northern People

இதனடிப்படையில் இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற மூன்றாவது கட்சியாக இலங்கை தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தமிழரசுகட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளமை வரலாற்று பதிவாகும்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்றிருந்தது. இம்முறைத் தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்றுள்ளது. அவ்வகையில் 69355 வாக்குச்சரிவுகளை எதிர்கொண்டுள்ளது.

இதனடிப்படையில் 2020இல் 9ஆசனங்களுடன் தேசியப்பட்டியல் ஆசனமொன்றுமாக 10ஆசனங்களை பெற்றிருந்த தமிழரசுகட்சி இம்முறை 7ஆசனங்களுடன் தேசியபட்டியல் ஆசனமொன்றுமாக எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

அவ்வகையில் கடந்த முறையை விட இம்முறை இரு ஆசனங்களை தமிழரசுகட்சி இழந்துள்ளது. கடந்த காலங்களில் பல கட்சிகள் இணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிருந்தது. இம்முறை தமிழரசுகட்சியாக மட்டுமே தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2020 தேர்தலில் அதிகூடிய வாக்குகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்டு 3ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இம்முறை இரண்டாவது கட்சியாகவே குறித்த மாவட்டத்தில் வாக்குகளைப் பெற்று ஓர் ஆசனத்தினை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணமாவட்டத்தில் 2ஆசனங்களை இழந்துள்ளது. அதேபோன்று 2020இல் வன்னி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.

இம்முறை மூன்றாம் நிலை வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தினையே பெற்றுள்ளது. இதனடிப்படையில் இரு ஆசனங்களை இங்கும் இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020இல் அதிகூடிய வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.

இம்முறை மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் ஓர் ஆசனம் மேலதிகமாக இம்முறை கிடைக்கப்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 2020இல் ஓர் ஆசனத்தினைப் பெற்றுக்கொண்ட தமிழரசுகட்சி இம்முறையும் அவ்வாசனத்தினை தக்க வைத்துள்ளது.

கடந்த வருடம் திகாமடுல்ல மாவட்டத்தில் எந்தவொரு ஆசனத்தினையும் பெற்றுக்கொள்ளாத தமிழரசுக்கட்சி இம்முறை ஓர் ஆசனத்தினைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில் 2020இல் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுகட்சிக்கு மூன்று ஆசனங்களே கிடைக்கப்பெற்றிருந்தன.

ஆனால் இம்முறை ஐந்து ஆசனங்களைப் பெற்றுள்ளன. வடக்கு மாகாணத்தில் ஆறு ஆசனங்கள் 2020இல் கிடைக்கப்பெற்றன. ஆனால் இம்முறை இரு ஆசனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாணத்தில் 4ஆசனங்கள் இல்லாமல் போயிருக்கின்றன.

இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி தோல்வியை தழுவியுள்ளமை புலனாகின்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் வருகைதந்த ஆறு ஆசனங்களும் இம்முறையும் கிடைத்திருந்தால் தேசிய பட்டியல் உட்பட 12ஆசனங்களை தமிழரசுகட்சி பெற்றிருக்கும்.

தேர்தலுக்கு பின்னரான காலம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட அறிவிப்பு!

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்போது தேர்தலுக்குப் பிந்தைய காலம் தொடங்குகிறது.

ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.

எனவே, இந்த காலகட்டத்தில் பொலிஸார் முழு உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் ரோந்து பயணங்களில் ஈடுபடுவதன் மூலம் தேவையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

புலனாய்வு அதிகாரிகள் பணியில் உள்ளனர்.

பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.”

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தப் பகுதியிலும் வன்முறை எதுவும் பதிவாகவில்லை.

இதுவரை கைது செய்யப்பட்ட 581 பேரில் 18 வேட்பாளர்கள் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆதரவாளர்கள்.” என்றார்.

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (16) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 16.11.2024

மேஷம்:

உற்சாகமான நாள். தெய்வ அனுகூலம் உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர் கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதன் காரணமாக மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்காது.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷபம்:

தேவையான பணம் கையில் இருந்தாலும், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மிதுனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

கடகம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் பிரச்னை ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்:

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களைக் கடிந்துகொண்டாலும், பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.

துலாம்:

மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் உங்கள் பணிகளை ஒப்படைக்கவேண்டாம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும். திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர், நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைக்கக் கூடும்.

தனுசு:

இன்று எதிலும் பொறுமை அவசியம். உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக் கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவினர் களிடம் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். அலுவலகப்பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்:

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் கிடைக்கும்..உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பம்:

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துவிடவும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் உதவியுடன் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மக்களால் தூக்கி எறியப்பட்ட முன்னாள் எம்பிக்கள்!

இலங்கையில் நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் ,டக்ளஸ் , சித்தார்த்தன், அங்கஜன்,கஜேந்திரன் இன்னும் பலர் மக்களால் தோற்கடிக்கப்படுள்ளனர்.

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தோல்வியடைந்தோர் விபரம்

இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்துள்ளார்.

ப்ளொட் இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற அங்கஜன் ராமநாதன் இம்முறை தோல்வியடைந்தார்.

கடந்த முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.ஈபிடிபியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இம்முறை பொதுத் தேர்தலில் தோல்வியுற்றதுடன், அவர் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகத் தவறியுள்ளார்.

வன்னி மாவட்டத்தில் கடந்த தடவை ஈபிடிபி சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவான குலசிங்கம் திலீபன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகக் கடந்த தடவை நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இம்முறை தேர்தலில் தோல்வியுற்றார்.அத்துடன் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுக் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இம்முறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் மட்டக்களப்பில் போட்டியிட்ட கோவிந்தம் கருணாகரன் தோல்வியுற்றார்.