நீடிக்கும் கடவுச் சீட்டு வரிசை!

கடவுச்சீட்டு தொடர்பில் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கோரிக்கையை அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்றும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கடவுச்சீட்டுக்கள் தொகுதிகளாக பெறப்பட்டு வருவதாகவும் நவம்பர் நடுப்பகுதி வரையில் 100,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத்தெரிவித்திருந்தார்.

அத்துடன், அவசர தேவை உள்ளவர்கள் மட்டும் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அதிகாரிகள் முறையான செயல்முறையை நடைமுறைப்படுத்தாமையால், குழப்பநிலையும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீடிக்கும் தேங்காய் தட்டுப்பாடு!

நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் தேங்காய் உற்பத்தியில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாக அதன் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

உரிய பருவத்தில் மழையின்மை மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு என்பன தென்னை உற்பத்தி குறைவதற்கு வழிவகுத்துள்ளதாக கலாநிதி நயனி ஆராச்சிகே குறிப்பிட்டுள்ளார்.

2023-ம் ஆண்டு மொத்த தேங்காய் விளைச்சல் தேங்காய் ஒன்றின் விலையில் இருந்து 1944-ஐ எட்டியுள்ளது.

இந்த ஆண்டு, எங்கள் கணிப்புகளின்படி, தேங்காய் ஒன்றின் விலையில் இருந்து சுமார் 2683 கிடைக்கும்.

முதல் மூன்று காலப்பகுதியை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டு தேங்காய் ஒன்றின் விலையில் இருந்து சுமார் 1597 கிடைத்துள்ளது.

அந்தத் தொகை முதல் மூன்று காலப்பகுதிக்கு 1423 போதுமானது. அதன்படி, முதல் மூன்று காலப்பகுதியிலும் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.

இந்த ஆண்டு தென்னை பயிர்ச்செய்கை பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக வெப்பம் என்ற இரண்டு பிரதான காரணங்களால் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, எதிர்பார்த்ததை விட குறைவான விளைச்சலே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய்ப்பால் இறக்குமதி செய்வது தொடர்பான யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

“கொழும்பு தேங்காய் ஒப்சன் ஊடாக குறிப்பிட்ட அளவு தேங்காய் விற்பனை செய்யப்படும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை பரிந்துரைத்துள்ளது.

தேங்காய் ஏலத்தை 100 ரூபாவிற்கு நடத்துவதற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்காக தேங்காய் பாலை இறக்குமதி செய்ய முன்மொழிந்துள்ளோம், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை” என்றார்.

பணவீக்கத்தில் மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த செப்டெம்பர் மாதத்தில் மறை 0.5 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் மறை 0.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேநேரம், கடந்த மாதம் செப்டம்பர் மாதம் மறை 0.3 ஆக இருந்த உணவு பணவீக்கம் இந்த மாதம் சிறியளவு உயர்ந்தும் ஒரு சதவீதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், செப்டம்பர் மாதத்தில் மறை 0.5 ஆக இருந்த உணவல்லா பணவீக்கம் மறை 1.6 ஆக ஒக்டோபரில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீபத்திருநாள் வாழ்த்துகள்

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துக்களை தமிழ்வின் ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.

இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை அத்துடன், பிரிவிலிருந்து ஒற்றுமை, விரக்தியிலிருந்து நம்பிக்கை என்பவற்றை இந்த நன்னாள் நமக்கு நினைவூட்டட்டும்.

இன்பங்கள் நிலைத்து துன்பங்கள் நீங்கி எல்லா மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத்திருநாளாக திகழும் தீபாவளித் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்.

இன்றைய ராசிபலன்கள் 31.10.2024

மேஷம்:

அனுகூலமான நாள். முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபர ணங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கி விடுவது நல்லது.

ரிஷபம்:

புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி வழக்கமான பணிகளில் பிரச்னை எதுவுமிருக்காது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் அவ்வப்போது சலனம் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

மிதுனம்:

மனதில் சிறு சலனம் ஏற்பட்டு நீங்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர் பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்மம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காலையிலேயே எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும்.

கன்னி:

உற்சாகமான நாள். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும் அன்பர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக் கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

துலாம்:

தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களாலும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகை கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

புதிய முயற்சி சாதகமாக முடியும். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். சிலருக்குக் குடும் பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

மகரம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தை வழி உறவினர்களால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் வீண்விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்:

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு திடீர்ப் பயணம் ஏற்பட் டாலும், ஆதாயம் தருவதாக இருக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகை யால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மோதலில் முடிந்த காதல்!

அனுராதபுரம் – கும்பிச்சாங்குளம் சுதந்திர வலயத்திற்கு அருகில் இன்று (30) பிற்பகல் யுவதியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவரும் குறித்த யுவதியும் காதலர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான காதலி தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே குறித்த தாக்குதலுக்கு காரணம் என தெரியவருகிறது.

இந்த யுவதி வேறு ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த சந்தேக நபர், தனது காதலியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே காதலனிடம் கத்தியும் விச போத்தலும் இருப்பதை அறிந்த இளம்பெண் காதலனிடமிருந்து தப்பிப்பதற்காக சுமார் 500 மீற்றர் தூரம் ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காதலன் சிறுமியை துரத்திச் சென்று தன்னிடமிருந்த கத்தியால் சிறுமியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைக் கண்ட மக்கள் ஒன்று திரண்டு வந்து அந்த யுவதியை காப்பாற்றி அந்த இளைஞனை வசப்படுத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர்கள் சுமார் 9 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியானை உத்தரவு!

வைத்தியர் அருச்சுனாவிற்கு மன்னார் நீதாவன் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வைத்தியர் மன்றில் முன்னிலையாகாததால் மன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவிகளை துஷ்பிரயோகம் ஆசிரியர்!

இரு மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித பாட ஆசிரியர் ஒருவர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை – வகவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் கணித பாட ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் போர்வையில் 14 மற்றும் 15 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சோகத்தை ஏற்ப்படுத்திய பல்கலை மாணவனின் மரணம்!

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் மாணவைன் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று (30) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் ஒக்டோபர் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.