உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகிய செய்தி!

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த பரீட்சையானது ஒத்திவைக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை தொடர்ச்சியாக உயர்வடைந்த நிலையில் இன்று பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அந்தவகையில், இன்றைய (30.10.2024) நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 817,556 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 28,840 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 230,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 26,440 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 211,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 25,240 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 201,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 203,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்ட மக்களுக்கு விசேட கொடுப்பனவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு தொகை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முந்தைய ஆண்டுகளில் பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உழைக்கும் தமிழ் மக்களின் குறைந்த சம்பளத்தினை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகைகான பொருட் கொள்வனவுக்காக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மக்கள் தமது உடமைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

டொலரின் இன்றைய நிலவரம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (30.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 298.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 374.52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.18 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.20 ஆகவும் விற்பனைப் பெறுமதி 324.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206.26 ஆகவும் விற்பனைப் பெறுமதி 215.50 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 187.53 ஆகவும் விற்பனைப் பெறுமதி 197.30 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.424 ஆகவும் விற்பனைப் பெறுமதி 226.77 ஆகவும் பதிவாகியுள்ளது.

மோட்டார் வாகனப் பதிவுத் திணைக்களத்தின் முக்கிய சில ஆவணங்கள் மாயம்!

மோட்டார் வாகனப்பதிவுத் திணைக்களத்திடம் இருந்த அச்சிடப்படாத 12 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் காணாமல்போயுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனங்களின் 12 வெற்று புத்தகங்கள் காணவில்லை என அதிகாரி ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல்போன புத்தகங்களின் இலக்கங்கள் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த புத்தகங்களின் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அந்த புத்தகங்கள் மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக அச்சிடப்பட்ட 1000 மோட்டார் வாகனப் பதிவுப் புத்தகங்கள் அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் 12 புத்தகங்கள் காணாமல்போயிருந்தும் அலமாரியின் கதவுகள் உடைக்கப்படாமல் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த அறைக்கு செல்லும் கதவு தெரியும் வகையில் சிசிடிவி கமராக்களும் செயல்படுவதால், அதன் மூலமும் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக வாகன ஒதுக்கீட்டுப் பிரிவின் உதவி ஆணையரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்திற்கு டிஜிட்டல் திரைகளை பயன்படுத்த தடை! 

எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது.

வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுவரை பெறப்பட்ட 869 முறைப்பாடுகளில் 723 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் அவசியம்!

எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணாமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக நடைபெறுகிறது. இந்த எண்ணெய் குளியலின் காரணம் என்ன? எப்படி எடுக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி நாம் இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

எண்ணெய் குளியல் தீபாவளிக்கு எடுக்க காரணம் என்ன?
தீபாவளியன்று மட்டும், நல்லெண்ணெயில் திருமகளும், நீரில் கங்கையும் வசிப்பதாக ஐதீகம். ஆகவே, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து நீராடினால், இருவருடைய அருளையும் பெறலாம் என்பது கருத்து. இன்னொரு காரணம், தீபாவளியன்று, லட்சுமி மற்றும் குபேர பூஜை, கேதார கௌரி விரதம் ஆகியவற்றை மேற்கொள்வார்கள். ஆகவே அன்று எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.

எண்ணெய் குளியலின் அவசியம் என்ன?
நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

எண்ணெய் குளியல் செய்ய சரியான நேரம் எது?
எண்ணெய் குளியல் காலை 6.30 – க்குள் தொடங்கி விட வேண்டும். இதமான வெந்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். எண்ணைக் குளியல் செய்த பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யக்கூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

பலன்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. மேலும் உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும். ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

என்ன எண்ணெய்யில் குளிக்க வேண்டும்
உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளுர்ச்சி சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும். ரிஃபைண்டு ஆயில் வேண்டாம்.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், உரிய முறைமையை தயாரித்து எதிர்காலத்தில் மக்களுக்கு அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பம்!

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகவுள்ளன.

மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கு மேலதிகமாக, நவம்பர் 4 ஆம் திகதியும் குறித்த அலுவலகங்களில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  

மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத தபால் மூல வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் வாக்கினைக் அடையாளப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கு நிறுவன அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது என  சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகளை இன்று முதல் ஏற்றுக்கொள்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் உத்தியோகத்தர்களை பணியமர்த்த எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ. வரை மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.