இன்றைய ராசிபலன்கள் 30.10.2024

மேஷம்:

அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்:

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம்.. பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.புனர்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கடகம்:

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக் கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத் தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த பணம் கிடைக்கக் கூடும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணம் கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். முக்கியமான முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். பிள்ளைகள் வழியில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்பட்டு சங்கடம் தரக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும்.

கன்னி:

எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள்வதையும் தவிர்க்கவும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

துலாம்:

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனால், சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்படக்கூடும்.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:

உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:

உற்சாகமான நாள். சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவர வுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக் கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர் களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். லாபம் வழக்கம்போலவே இருக்கும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

மகரம்:

எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களால் பிரச் னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

கும்பம்:

மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும்கூட கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார். சிலருக்கு வீட்டி லும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்து ழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

அவசர தேவை உடையவர்கள் மட்டுமே கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளவும்!

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு போதியளவு கடவுசீட்டு கையிருப்பில் உள்ளதால் நீண்ட கால தேவைகளுக்காக கடவுச்சீட்டு தேவைப்படுவோர் காத்திருக்க வேண்டும்.

தற்போது, தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தம் 1,600 கடவுசீட்டுகள் திணைக்களத்தில் நாளாந்தம் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

பணம் அச்சிடப்பட்டதா? மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை!

புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை பராமரிக்க திறந்த சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பணம் அச்சிடல் என்று பதிவு செய்திட முடியாது.

இதனூடாக, அரசாங்க வரவு செலவுத் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக பணம் அச்சிடல் அல்லது முறையற்ற பண விநியோகம் முற்றிலும் இடம்பெறவில்லை. இங்கு நடந்திருப்பது மத்திய வங்கியின் விலை ஸ்திரத்தன்மையின் நோக்கங்களை அடைவதற்கான ஒரு சாதாரண செயற்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி!

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (29) உயர் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.

குறித்த மனு, சீராக்கல் மனு ஊடாக அழைக்கப்பட்ட போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி, மனுவில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிட அனுமதி கோரினார்.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்த மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்திய தொலைபேசி அழைப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, நேற்றைய தினம் (ஒக்டோபர் 28) விமான நிலையத்தில் உள்ள தொலைபேசி செயற்பாட்டாளரை தொடர்பு கொண்டு இந்த போலி தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மகனுக்கு 30 வயது எனவும் தந்தைக்கு சுமார் 50 வயது எனவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தியதை பார்த்து தான் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இதன்படி, அழைப்பை பெற்ற தொலைபேசியின் உரிமையாளர்களான தந்தையும் மகனும் வாரியபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னிலங்கை ஊடகமொன்று குறித்த விடயத்தை உறுதிபடுத்தியதாக இந்த செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

கேபிள் கார் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அம்புலுவாவ கேபிள் கார் வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையிடுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை நீடிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ராஜகிரியவில் அமைந்துள்ள எம்பர் எட்வென்ச்சர் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுவை மீள் பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, அம்புலுவாவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள நாட்டின் முதலாவது கேபிள் கார் திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்கு இடையூறுகள் அல்லது தலையீடுகள் ஏற்படாதவாறு கம்பளை பிரதேச செயலாளருக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த மனு மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய, எதிர்மனுதாரர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, நாள் ஒன்றை கோரியிருந்தார்.

இதன்போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, சனத் விஜேவர்தனவின் ஆலோசனையின் பேரில், கேபிள் கார் திட்டம் அமுல்படுத்தப்படும் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட பிரதேசம் எனவும் அதன் விடயங்களில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை எனவும்  சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை டிசம்பர் 2 ஆம் திகதி தாக்கல் செய்ய அனுமதித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, தற்போது வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை அன்றைய தினம் வரை நீடிப்பதாக உத்தரவிட்டது.

மனுதாரர் நிறுவனம் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, அனைத்து அரச நிறுவனங்களும் தேவையான அனுமதியை வழங்கியிருந்தும் கம்பளை பிரதேச செயலாளர் இந்த கேபிள் கார் திட்டத்தை நிர்மாணிக்கும் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தினை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, திட்டத்திற்கு இடையூறுகள் மற்றும் முறையற்ற தலையீடுகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

கம்பளை பிரதேச செயலாளர் தில்ருக்ஷி ஜயரத்ன, இலங்கை சுற்றுலா சபை மற்றும் முதலீட்டு சபை உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாரிய மோசடி குறித்து அரசு எச்சரிக்கை!

வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரங்கள் மூலம் தனிநபர் தரவு மற்றும் நிதித் தகவல்களைப் பெறுவதன் மூலம் இணைய மோசடிகள் இந்த நாட்களில் பொதுவாக இடம்பெறுவதை காணக்கூடியதாக உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதன்படி, பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகளின் பெயர்களைப் பயன்படுத்தி இணையவழி ஊடாக நன்கொடைகள், ரொக்கப் பரிசுகள், அதிர்ஷ்ட வெற்றிகள், அதிக லாபம் ஈட்டும் பொருட்களை வழங்குதல், காப்பீடு வழங்குதல் ஆகியவற்றிற்காக பதிவு செய்துக் கொள்ளுமாறு அறிவித்து அனுப்பப்படும் போலியான குறுந்தகவல்கள் மற்றும் WhatsApp செய்திகள் ஊடாக OTP கடவுச்சொல் தகவல்களைக் கோரும் செய்திகள் தொடர்பில்  குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் மேலும் அறிவுறுத்துகிறது.

இந்த இணைய மோசடியாளர்கள் போலி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்எப் செய்திகள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர்கள் பெற்றுத் தரும் லின்க் உள்ளே பிரவேசிப்பதன் ஊடாக சம்பந்தபட்ட நபரின் கணினி, கைப்பேசி தரவுகள் திருடப்படும் மோசடிகள் போன்று நிதிமோசடியும் இடம்பெறுகிறது.

விசேடமாக வட்ஸ்எப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் OTP கடவுச்சொல் தகவலைக் கேட்பதன் மூலம் குற்றவாளிகள் உங்கள் WhatsApp கணக்கைக் கட்டுப்படுத்துவார்கள்.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (29.10.2024) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையவே, குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து, கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை!

இலங்கை வந்த இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நேற்றையதினம் (28) கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள்

இந்த வெடிகுண்டு மிரட்டலானது இந்தியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்றுக்கே விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த விமானம் வழமைபோன்று நேற்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதன் போது விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் இருந்துள்ளனர்.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மேலாளருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்கவிமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், ஏற்கனவே இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுநாக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காய்ச்சல், பன்றி இனப்பெருக்கம் மற்றும் சுவாச மற்றும் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தேவையான பின்வரும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம்
* ஆபத்தில் உள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தயாரிப்புகள் அல்லது நோயை உண்டாக்கும் பொருட்களை தொற்று அல்லது ஆபத்தில் உள்ள பகுதிகளின் வௌியே கொண்டு செல்வது, அகற்றுவது அல்லது விரட்டுவது.

* பாதிக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்தல்.

* நோய் அபாயத்தில் உள்ள விலங்குகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறைக்கு பயன்படுத்துதல்.

* ஆபத்தான விலங்குகளைப் பயன்படுத்தி நேரடி விலங்கு சந்தைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துதல்.

* பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் தயாரிப்புகள் மற்றும் நோயை உண்டாக்கும் பொருட்களை விற்பனை செய்தல், மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல் அல்லது விநியோகித்தல்.

* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் விட்டுச் செல்லுதல்.

* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை ஏனைய விலங்குகளால் வேறு இடத்திற்கு அல்லது பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடிய இடத்தில் வைப்பது அல்லது நிலைப்படுத்துவது தடை செய்ய சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.