கார்த்திகை பூவுக்கு லைக் பண்ணிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனுக்கு பிணை…!

விடுதலைப் புலிகள் மாவீரர் தின கார்த்திகைப் பூவிற்கு முகப்புத்தகத்தின் ஊடாக விருப்பத்தைத் தெரிவித்த திருகோணமலை மூதூர் பிரதேச இளைஞன் ஒருவருக்குத் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த வருடம் (27.11.2020) அன்று முகப்புத்தகம் ஒன்றில் விடுதலைப் புலிகள் மாவீரர் தின நிகழ்வுகள் கார்த்திகைப் பூவிற்கு முகப்புத்தகத்தில் விருப்பத்தைத் தெரிவித்த இளைஞன் கைத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டார்.

பின்பு மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். (30.11.2020) மூதூர் நீதவான் நீதி மன்றில் அவர் முன்னிறுத்தப்படத்தை அடுத்து இன்று வரை 13மாதம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் பிணை விசாரணை நடைபெற்ற போது கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் கடமையாற்றும் இவ்இளைஞன் விடுதலைப்புலிகளுடன் எந்தவித தொடர்புகளும் இல்லை என அவர் சார்பில் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.

அதனை அடுத்து ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இருவரின் சரீர பிணையுடன் செல்வதற்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த வருடம் மாவீரர் நாள் அனுஷ்டித்த பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.