ஒசூரில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த பள்ளி மாணவி : நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ, கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் சினிகிரிப்பள்ளி கிராமத்திற்கு மாணவி நவ்யாஸ்ரீ வந்துள்ளார். பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது, தனது கிராமத்தில் பேருந்து நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார்.

மாணவி சாலையில் விழுந்ததில் பேருந்தின் பின்பக்க டயர் கை மற்றும் காலின் மீது ஏறி சென்றது, விபத்துக்குள்ளான மாணவி அதே பேருந்தில் உத்தனப்பள்ளி மருத்துவமனையில் அனுமதித்து பின்னர்,

ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் வெங்கடேஷ் மற்றும் நடத்துனர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் கெலமங்கலம் முதல் உத்தனப்பள்ளி வரையிலுள்ள நிறுத்தங்களில் வேகத்தடை அமைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சில ஓட்டுனர்கள் நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிவேகத்தில் செல்வதால் இதுபோல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கிராமப்புற மாணவ மாணவர்கள் பேருந்துகளை நம்பியே செல்கின்றனர்.

அவர்களை பாதுகாப்போடு அழைத்துச் செல்வது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கடமை. அதனை மீறுபவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.