யாழ் – நெடுந்தீவு கடற்கரையில் கரையொதுங்கிய பெருமளவு மீன்கள்!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் பெருமளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்கக் கூடும் என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

கடந்த புதன் கிழமை வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவை மடி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரைக் கண்டு தப்பியோடியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு இலங்கை கடற்படையைக் கண்டு ஓடிய போது மடியை வெட்டிவிட்டு சென்ற காரணத்தினால் தான் இவ்வளவு பெருந்தொகையான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.