போர் தீவிரத்தால் சோகத்தில் இருக்கும் உக்ரைனிடம் கடன் கேட்கும் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளிடம் அரசாங்கம் உதவி கோரி வருகிறது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் உர நெருக்கடிக்கு பல நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை பெற்றுக்கொள்ள உக்ரேன் அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே ரஷ்யாவிடம் எரிபொருளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் அது தொடர்பில் பரிசீலிப்பதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுத்துள்ள உக்ரேனிடம் இலங்கை அரசாங்கம் உதவி கோரியுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு உரம் வழங்குமாறு ஏழு நாடுகளின் தூதுவர்களிடம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவிடமும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 65,000 தொன் உரத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது