யாழில் தொலைப்பேசி , மோட்டார் சைக்கிளை அடகு வைத்து போதைப்பொருள் பெரும் இளைஞர்கள்!

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் இல்லையென்றால், போதைப்பொருள் வாங்குவதற்கு தொலைபேசி, மோட்டார் சைக்கிள் போன்ற பெறுமதியான பொருட்களை அடகு வைத்து இளைஞர்கள் வாங்கி வருவதாக போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், பொம்மை வெளிப் பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் குறித்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மறுபுறம் இவர்களிடம் போதைப்பொருள் வாங்க வருபவர்கள் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் கையடக்கத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள்களை அடகு வைத்து போதைப்பொருள் கொள்வனவு செய்வதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் சந்தேகநபர்களிடம் போதைப்பொருள் கொள்வனவு செய்வதாக ஒப்படைக்கப்பட்ட சுமார் 08 இலட்சம் ரூபா பெறுமதியான 07 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் நவீன மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.