ஹட்டனுக்கு சுற்றுலா வந்த 8 சுற்றுலாபயணிகளை கைது செய்த பொலிஸார் !

ஆண்டு இறுதி விடுமுறையை கழிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்கு குவிகின்றனர்.

போதைப்பொருளுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை, பதுளை ஆகிய பகுதிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரயிலில் வந்து செல்கின்றனர்.

இதனால் ரயில்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. மலையகப் பகுதிகளுக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்வதை தடுக்கும் நோக்கில், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயிலில் வருபவர்கள் ஹட்டன் புகையிரத நிலையத்திலும், வாகனத்தில் வருபவர்கள் கினிகத்தேனை களுகல தியகல உட்பட பல இடங்களில் பரிசோதிக்கப்படுகின்றனர்.

நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 08 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த நபர்களிடமிருந்து ஏஸ், கேரளா கஞ்சா, மதனமோதக்காயா, மாவா, ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு, குருநாகல், அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.