கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் இத்தனை காலங்களுக்கு இடைநிறுத்தம் !

கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ரயில் சேவை (ஜன 05) முதல் எதிர்வரும் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

பயணிகள் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதையடுத்து மேலும் 33 அரச பேருந்துகளை கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

புகையிரத புனரமைப்பின் முதற்கட்டமாக கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான புகையிரத சேவையை ஐந்து மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புனரமைப்பு பணிகள் மிக விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 500 ரயில்வே ஊழியர்கள் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், தற்போது ரயில்வே சேவையில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.