யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி !

கைதடி மண்ணின் மைந்தரும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 89 அணி மாணவனும் அமெரிக்காவின் University of South Dakota இனது Sanford School of Medicine இன் சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமாகிய பேராசிரியர் தம்பிப்பிள்ளை தவச்சேந்தனதும் (Prof Thav Thambi-Pillai)

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் வைத்தியத் துறையினரதும் பங்கேற்புடன் கடந்த 18.01.2023 புதன் காலை முதல் மாலை வரை சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

17 வயதான பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயார் உடனடியாக தானம் செய்ய அது பொருத்தப்பட்டது எனத் தெரியவருகிறது. இவ்வாறு உயிருடன் இருக்கும் ஒருவரிடம் பெற்று மற்றையவருக்கு பொருத்துவது எமது மண்ணில் மருத்துவ வளர்ச்சியின் மைல் கல்லாக அமைந்துள்ளது.

IMHO (International Medical and Health Organisation) இன் பங்களிப்புடன் புத்துருவாக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கூடத்தில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. Dr தவம் IMHO இன் தலைவராக இருந்தவர் தற்போது உப தலைவராக இருக்கிறார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியின் அயராத முயற்சியினால் இடம்பெற்ற இந்த சாதனையை பாராட்டி வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம்.