முடி உதிர்வை தடுக்க இயற்கை வழிகள்!

முடி உதிர்தல் என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. பெண்களைப் போலவே, பெரும்பாலான ஆண்களும் முடி உதிர்தலால் பாதிக்கப்படுகின்றனர்.

முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதற்க்காக மருந்து மற்றும் எண்ணெய்களை நம்பாமல், இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்கள் தலைமுடியைப் பராமரித்தால் குறைந்தபட்சம் இருக்கும் முடியையாவது பாதுகாக்கலாம்.

மேலும், சில இயற்கை பொருட்கள் உச்சந்தலையில் கூட முடி வளர்ச்சியை தூண்டும் சக்தி கொண்டது. எனவே முடி வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் முடி உதிர்வதைத் தடுப்பதற்கும் சில இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயை துண்டு துண்டாக நறுக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். எண்ணெய் ஆறியதும், ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, பின்னர் பயன்படுத்த சேமித்து வைக்கவும். இந்த நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், விரைவில் முடி உதிர்வது கட்டுப்பட்டு, முடி வளர்ச்சியும் தூண்டப்படும்.

வெங்காயம்

முடி உதிர்வுக்கு வெங்காயம் சிறந்தது. வெங்காயத்தை அரைத்து, அந்த பேஸ்ட்டை முடி கொட்டும் இடத்தில் தடவி சிறிது நேரம் மெதுவாக மசாஜ் செய்தால் முடி உதிர்வு கட்டுப்படும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வெங்காயத்தில் உள்ள கந்தகம், உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

வெந்தயம்

வெந்தயம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. 2 டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவும். பிறகு தலையை லேசாக மசாஜ் செய்யவும். வாரம் இருமுறை இந்த சிகிச்சையை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால், முடி நன்றாக வளரும்.

சீகைக்காய்

சிறிதளவு நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயை 2 லிட்டர் நீரில் போட்டு, பாதியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, அரைமணி நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கடுகு எண்ணெய்

ஒரு கப் கடுகு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு சூடேற்றி, அதில், ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் வழுக்கைத் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, சொட்டையான இடத்திலும் முடியின் வளர்ச்சியைக் காணலாம்.

ஷாம்பு

பெரும்பாலும் ஷாம்புவை தவிர்த்தாலே முடி உதிர்வை தவிர்த்துவிடலாம். சிகைக்காயை அரைத்து வைத்துக் கொண்டு, வாரத்திற்கு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து சீகைக்காய் தூள் பயன்படுத்தி தலைக்கு குளித்து வர முடி உதிர்வு கட்டுப்படும்