பேஸ்புக்கில் வலைவிரித்து 10இற்கும் மேற்பட்ட திருமணம்: கல்யாண ராணிக்கு வலைவீச்சு!

10க்கும் மேற்பட்டோருடன் திருமணம் செய்து, பணம் நகையுடன் தலைமறைவாகும் கல்யாண ராணியை தேடி பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருப்பதால் இவருக்கு வேலூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவரிடம் நட்பாக பேசிய அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். நாளடைவில் அவர்களது பேஸ்புக் நட்பு காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண்ணும் திருமணம் செய்தால் அருள்ராஜை தான் திருமணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரடானேஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்றுள்ளது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும் போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அவரது மனைவி கணவரிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் தான் நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அருள்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் அவரது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்க படம் ஆகியவற்றை வைத்திருந்துள்ளார். அதனை மொத்தமும் அவரது மனைவியிடம் கொடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது தோழியை பார்த்துவிட்டு வருமாறு கூறி சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் சென்ற பிறகு அந்தப் பெண் மீண்டும் அருள்ராஜ் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. வெகு நாட்களாக அருள்ராஜ் அந்த பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மட்டுமே பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அருள் ராஜுக்கு சந்தேகம் ஏற்படவே அவரது மனைவி கூறிய விலாசத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் அந்தப் பெண் கொடுத்த முகவரி போலியானது எனவும் அவர் தான் தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதும் தெரிய வந்துள்ளது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் அருள்ராஜ் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்களை திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக அருள் ராஜை தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக கூறியும் அந்தக் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் கூறியும் புகைப்படம் ஒன்றை அருள்ராஜ்க்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல வாலிபர்களை பெண் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது