சாரதி அனுமதி பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கான முக்கிய செய்தி!

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மனநிலை தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்னவே, நிறுவனத்தின் 26 அலுவலகங்களையும் ஒருங்கிணைக்கும் புதிய டிஜிட்டல் முறையை உருவாக்கி, அந்த அமைப்பின் மூலம், ஒவ்வொரு தனிநபரின் மருத்துவச் சான்றிதழையும் நேரடியாகச் சேர்க்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவச் சான்றிதழைப் பெறும் சேவை வழங்குநர்களுக்கு மறைக்குறியீடு மூலம் சான்றிதழைக் கொடுத்து, அந்த மறைக்குறியீட்டை மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் சமர்ப்பித்த பிறகு, அவர்களின் சேவை செய்யப்படும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அமைப்பை இந்த வேலைத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் டி.குசாலானி சில்வாவிடம் வினவியபோது, ​​மோட்டார் போக்குவரத்து திணைக்கள அமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.