உலக கிண்ண தகுதிகாண் சுற்றில் சம்பியன் ஆனது இலங்கை

நெதர்லாந்துக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிப் போட்டியில் 128 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இலங்கை, தோல்வி அடையாத அணியாக சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

சஹான் ஆராச்சிகே பெற்ற கன்னி அரைச் சதம், மஹீஷ் தீக்ஷனவின் 4 விக்கெட் குவியல், டில்ஷான் மதுஷன்கவின் 3 விக்கெட் குவியல் என்பன இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தின.

தகுதிகாண் மற்றும் சுப்பர் 6 சுற்று முடிவில் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 22 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன 21 விக்கெட்களையும் கைப்பற்றி அதிக விக்கெட்கள் வீழ்த்தியோர் வரிசையில் முதலிரண்டு இடங்களைப் பெற்றனர்.

இறுதிப்  போட்டியில் திமுத் கருணாரட்னவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதுடன் மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட வனிந்து ஹசரங்க இப் போட்டிக்கு மிளழைக்கப்பட்டிருந்தார்.

நெதர்லாந்து அணியில் சகலதுறை வீரர் பாஸ் டி லீடுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை சற்று சிரமத்திற்கு மத்தியில் 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 233 ஓட்டங்களைப் பெற்றது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஹான் ஆராச்சிகே இரண்டு முக்கிய இணைப்பாட்டங்களில் பங்குபற்றி இலங்கை அணியை கௌரவமான நிலையில் இட்டார்.

சஹான் ஆராச்சிகே, 3ஆவது  விக்கெட்டில்   குசல் மெண்டிஸுடன் 72 ஓட்டங்களையும் 4ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் 64 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

சஹான் ஆராச்சிகே மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 51 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 43 ஓட்டங்களையும் சரித் அசலன்க 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட பெத்தும் நிஸ்ஸன்க (23), வனிந்து ஹசரங்க (29) ஆகிய இருவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

36ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்து இலங்கை, அதன் பின்னர் கடைசி 7 விக்கெட்களை 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

பந்துவீச்சில் விக்ரம்ஜித் (12 – 2 விக்.), லோகன் வென்  பீக் (40 – 2 விக்.), ரெயான் க்ளெய்ன் (42 – 2 விக்.),  சக்கிப் ஸுல்பிகார் (59 – 2 விக்.) ஆகியோர் 8 விக்கெட்களைப் பகிர்ந்தனர்.

234 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 23.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள், ஸிம்பாப்வே, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளை அதிரவைத்த நெதர்லாந்து 2ஆவது தடவையாக இலங்கையிடம் தோல்வி அடைந்தது.

சுப்பர் 6 போட்டியில் இலங்கையிடம் 21 ஓட்டங்களால் நெதர்லாந்து தோல்வி அடைந்திருந்தது.

இறுதிப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நெதர்லாந்து துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தனர்.

12 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றிருந்த நெதர்லாந்து சிரமத்திற்கு மத்தியில் 100 ஓட்டங்களைக் கடந்தது.

ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ’டவ்ட், லோகன் வென் பீக் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 36 ஓட்டங்களே நெதர்லாந்து இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மெக்ஸ் ஓ’டவ்ட் (33), லோகன் வென் பீக் (20 ஆ.இ.), விக்ரம்ஜித் சிங் (13) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.