யாழ் கொழும்பு ரயில் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத திட்டத்தின் முதலாவது கட்டத்தை இந்தியா 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில், 91.27 மில்லியன் டொலர் செலவில் இந்தியா இந்த கொழும்பு – யாழ் புகையிரத போக்குவரத்து திட்டத்தை நிறைவு செய்துள்ளது.

இதன் இரண்டாம் கட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு , புகையிரத பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய இவற்றில் பயணிக்கும் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும். இதனால் கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கிடையிலான பயண நேரம் பெருமளவில் குறைவடையும்.

எவ்வாறிருப்பினும், இது இலங்கையின் முதலாவது புகையிரத திட்டம் அல்ல. இதற்கு முன்னர் சுனாமியின் போது ஏற்பட்ட விபத்தால் சேதமடைந்த தெற்கு புகையிரத பாதையும் இந்தியாவினால் புனரமைத்துக் கொடுக்கப்பட்டது. 

இந்தியா இதுவரை சுமார் 300 கி.மீ புகையிரத பாதையை மேம்படுத்தியுள்ளதுடன், இலங்கையில் சுமார் 330 கி.மீ தூரத்திற்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளையும் வழங்கியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்கான இந்தியாவின் ஒட்டுமொத்த முயற்சிகளின் ஒரு பகுதியான இத்திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் அண்டை நாட்டுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இலங்கையுடன் வலுவான வலையமைப்பை உருவாக்க உதவுகிறது. இதுதவிர, இந்தியாவிற்குள் மட்டுமின்றி வெளியிலும் வலுவான இணைப்பை உருவாக்குவதற்கான டில்லியின் உந்துதலையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் ஏற்கனவே சில கொந்தழிப்பான நிலைவரங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தியாவின் அரசியல் செல்வாக்கை மேலும் அதிகரிப்பதற்கு இவ்வாறான வேலைத்திட்டங்கள் உதவும் என்பதோடு, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் ஈடுபாட்டுக்கான ஒரு பதிலடியாகவும் இது அமையும்.

கடந்த ஆண்டிலிருந்து இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. முன்னொரு போதும் இல்லாதவாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கைக்கு, ஆரம்பத்திலிருந்து  உணவு மற்றும் மருந்து உட்பட பல ஆதரவுகளையும், உதவிகளையும் வழங்கியுள்ளது.

ஜப்பான் மற்றும் பிரான்ஸுடன் இணைந்து, இலங்கையின் மீள் எழுச்சியை மேற்பார்வையிடும் 17 நாடுகளின் குழுவுக்கு இந்தியா இணைத் தலைமைத்துவத்தை வழங்குகிறது. ஆனால் இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 20 வீதத்தைக் கொண்டுள்ள சீனா, இந்த இருதரப்புக் கடன் வழங்குனர்கள் குழுவில் இணைய மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.