வவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரும் கைதானவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இருவருமே முன்னாள் போராளிகள்
39 வயதான கொலையாளி ஒன்றரை வருடமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர், யுத்தம் முடிவதற்கு முன்னரே அந்த அமைப்பை விட்டு விலகி விட்டார்.

அவர் மீது சுமார் 5 வகையான வழக்குகள் உள்ளது. கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் 20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது. ​

அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து, மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21) மாலை அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

உயிர்ழந்த மகேஸ்வரன் யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.