தனுஷ்க மீதான விசாரணையை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் நடாத்த தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்காக இலங்கைக் கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தபோது, தனுஷ்க குணதிலக்க தன்னை பாலியல் 

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, அவுஸ்திரேலிய பொலிஸாரால் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும், அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பில் சிட்னியிலுள்ள டோனிங் சென்ட்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்க குணதிலக்க நேற்று (24) ஆஜரானார்.

தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராஜ், இவ்விசாரணையை துரிதமாக நடத்தக் கோரி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். 

இவ்வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட்டு, தனுஷ்க குணதிலக்க நிரபராதியாக காணப்பட்டால், அவர் விரைவாக நாடு திரும்புவதற்கும், தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீள ஆரம்பிக்கவும், தனது குடும்பத்தினருக்கு பொருளாதார உதவிகளை அவரால் முடியும் என சட்டத்தரணி தங்கராஜ் சுட்டிக்காட்டியிருந்தார். 

அரச தரப்பு சட்டத்தரணியும் துரித விசாரணைக்கு ஆதரவு தெரிவித்தார். அதையடுத்து, செப்டெம்பர் 18 ஆம்  திகதி இவ்விசாரணை ஆரம்பமாகும் என நீதிபதி வோர்விக் ஹண்ட் அறிவித்தார். இவ்விசாரணை 5 தினங்கள் நீடிக்கவுள்ளது. 

இவ்விசாரணையை ஜூரர்கள் இல்லாமல், நீதிபதியின் முன்னிலையில் மாத்திரம் விசாரிக்குமாறு கோரியும் தனுஷ்கவின் சட்டத்தரணி மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இக்கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

தனுஷ்க குணதிலக்க கடுமையான மன அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமதின்றம் ஏற்றுக்கொண்டது.

அதேவேளை, தனுஷ்க மீதான வழக்கு மீதான ஊடகங்களின் கவனக் குவிப்பு தொடர்பிலும்  நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இவ்வழக்கு தொடர்பில் 2.2 மில்லியன் செய்தி அறிக்கைகள் வெளியாகியுள்ளதாக தனுஷ்கவின் சட்டத்தரணி முருகன் தங்கராஜ் தெரிவித்தார்.

எனினும், பின்னர் தனது மதிப்பீட்டில் மாற்றம் செய்த அவர், பற்பல தளங்களில் பற்பல ஆக்கங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இவை முற்றிலும் தீங்கற்றவை அல்ல எனவும், ஜூரர்கள் முன்னிலையில்  தனது சேவை பெறுநர் விசாரணையை எதிர்கொள்வதற்கு இவை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சட்டத்தரணி தங்கராஜ் கூறினார். 

பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் வெளியான, தனுஷ்க தொடர்பான குற்றச்சாட்டுகளை பார்வையிட்ட நீதிபதி, தப்பப்பிராயங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து தான் கரிசனை கொள்வதாக தெரிவித்தார். 

எனினும், இப்பிரசித்தங்கள் பாதகமானவையாக இருக்கும் என்பதில்லை எனவும், அவை வெறுமனே குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையிடலாகும் எனவும் அரச தரப்பு சட்டத்தரணி கூறினார்.