இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட அறிவிப்பு!

எது நடந்தாலும் நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாததாகும் என்பதை  இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எப்போதும் கருதுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வழக்கு குறித்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் நேற்று (08) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு  சட்டத்தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை மற்றும் பொய்மையை விசாரணை செய்வதற்கு பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்குமானால், அது இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாக வேண்டும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.