தமிழ் மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழ் மக்களையும் ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்த தேர்தலின் வெற்றியை நோக்கியாக மட்டும் கொண்டு செல்லும் இந்த பாதையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்காகவே எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே சர்வதேச சமூகத்திற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது. 

இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக தெளிவாக சொன்னது இவை அனைத்தும் ஒரு நாடகம், இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படடுள்ள நிலையில் பிச்சை கேட்கும் நாடாக மாறியிருக்கின்ற நிலையில் இந்த நிலைமை உருவாகுவதற்கான அடிப்படை காரணமே இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அதுவொரு யுத்ததிற்கு இட்டுச் சென்று இறுதியில் அந்த யுத்திற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தான் கடனுக்குள் இலங்கை மூழ்குவதற்கு முக்கிய காரணியென்றும் இன்று வரவு செலவிட்டத்தில் சுமார் 15 வீதம் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகின்றது. என்றால் நாடு முன்னேற முடியாது, இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்ட சூழலில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே தவிர ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் இந்த பிரச்சினையை தீர்க்கமாட்டார் என்று கூறி நாங்க்ள சவால் விட்டோம்.

துமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாகயிருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர் தேசத்தினை அங்கீகரிக்கின்ற இறைமையினை அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வு, பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி இந்த பிரச்சினை சமஸ்டியின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாக அமையும் என்ற உண்மையினை ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகவே கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.

ஆதனை செய்யாமல் வெறுமனே தீர்வுக்கு வாருங்கள் பேசுவோம்,பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினை கொடுப்போம் என்பதெல்லாம் பம்மாத்து, அப்பட்டமான பொய்கள், சர்வதேச நெருக்கடிகளை சமாளித்தப்பது மட்டுமேயாகும். அதனாலேயே பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு மறுத்தோம். நாங்கள் ஏமாறுவதற்கும் தயாரில்லை, ஏமாற்றப்படுவதற்கும் தயாரில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக மட்டும் செல்லும் இந்த பாதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. எங்களை ஏமாற்ற முடியாது என்பதற்காக எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. 

அதற்காக ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார் ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் சரியா கண்டுபிடித்துள்ளார்.

ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் தொடக்கம் கூறிவந்த பொய்யை நேற்றைய சந்திப்பில் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.

அடுத்த தேர்தலின் பின்னர் ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவேன் என்று கூறியிருக்கின்றார். கடந்த ஒன்றரை வருடமாக சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது கூறும் புதிய பொய்யையும் நம்பி ஏமாறப்போகின்றார்களா? ஏன்ற கேள்வியிருக்க இவ்வாறான ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம்.

தற்போது இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை, தேர்தலின் பிறகுதான் பேசலாம் என்று ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தெளிவான செய்தியை வழங்கிய பின்னரும் தமிழர் தரப்பு அவருக்கு முன்டுகொடுக்குமானால் வெறுமனே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று நிரூபிக்கப்படும்.

தயவுசெய்து நீங்கள் எடுக்கும் தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஸ தரப்பையும் தொடர்ந்து காப்பாற்ற வேண்டாம்.

இந்த 13 ஆவது திருத்தம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற விடயம் அதில் உச்ச நீதிமன்றம் ஆழமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் கிட்டத்தட்ட முப்பது தீர்ப்புகள் இந்த 13 ஆம் திருத்தத்திற்குள் அதிகாரம் பகிரப்பட முடியாது ஒற்றையாட்சி இருக்கும் வரைக்கும் அதிகார பகிர்வு நடக்கவே நடக்காது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் அந்த உண்மை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தி இன்று மக்களும் அதை உணரத் தொடங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ தாங்கள் சரியானதற்காக தான் தொடர்ந்தும் இருப்பதாக காட்டிக் கொல்வதற்காக இப்போது 13 ஆவது திருத்தம் என்பதனை பெரிய அளவில் வலியுறுத்தாமல் அவர்கள் ஒரு புது உபாயத்தை இன்று நமது மக்கள் மத்தியில் காட்டப் போகின்றார்கள்.

அது என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற புதிய கோஷத்தை கதைப்பதன் ஊடாக 13 ஆம் திருத்தத்தை மெல்ல அமைதியாக வலியுறுத்துவதை மூடி மறைக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

அனைவருக்கும் தெரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினர்களும் 13 ஆவது திருத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். நாங்கள்தான் அதனை பிரித்து பார்க்கின்றோம். நாங்கள் தான் கூறுகின்றோம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை. 

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற பெயரிலே கொண்டு வந்திருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தான் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அந்த வேறுபாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி இந்தியாவிடமும் எமது மக்களிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். இலங்கை அரசிடமும் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதில் ஆரம்பப் புள்ளி கூட இல்லை. இந்த யதார்த்தம் மக்கள் மத்தியில் இன்றைக்கு தெளிவாகிக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் அதே நேரம் இந்த தமிழ் தரப்புகள் தொடர்ந்து 13 வலியுறுத்த விரும்புகின்ற ஆனால் வெளிக்காட்ட முடியாது தேர்தலும் வருகின்றது தேர்தலில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி சென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்கின்ற பயம் இருக்கின்றது இதனால் அவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் கெட்டித்தனமாக 13 பெரிதாக கதைக்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னால் அதிலிருந்து தப்பலாம் என நினைக்கின்றார்கள்.

தமிழருக்கு நன்றாக தெரியும் இந்த ரணில் விக்ரமசிங்க எதுவுமே செய்யப் போவதில்லை என்று அவருக்கு ஒரு எண்ணம் இருந்தாலும் கூட ஒன்றும் செய்ய மாட்டார். 

ஏனென்றால் தேர்தல் வரப்போகின்றது தேர்தலில் வெள்ளம் வேண்டும் என்பதனை தான் சிந்திக்கப் போகின்றார். ஆகவே கடைசி வரைக்கும் அவருக்கு எண்ணம் இருந்தாலும் அவர் செய்யப் போவதில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது. 

இதனை தெளிவாக விளங்கிக் கொண்டுதான் நாங்கள் தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியை நம்பாதீர்கள் இவருடைய வார்த்தைகளை நம்பாதீர்கள் என மக்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றோம்.

இந்த ரணில் விக்கிரமசிங்க நம்பாதீர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட 2005 ஆம் ஆண்டு எமது மக்களிடம் சொன்னார்கள். 

அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உண்மையை மக்களிடையே சொல்ல மக்கள் குழம்பி விட்டனர். தமிழ் ஆய்வாளர்கள் குழம்பினர். ஏதோ புலிகள் வந்து பிழையாக இந்த விடயங்களை கணக்குப்போகின்றார்கள் என்று. எந்த அளவு தூரத்திற்கு ஒரு தீர்க்கதரிசனம் என்பது இன்று இந்த ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளினால் நிரூபித்து இருக்கின்றார். அதுதான் உண்மை.

ஆகவே இந்த ரணில் விக்கிரமசிங்கமிடம் வந்து உண்மையைக் கூறினால் எதையும் எதிர்பார்க்க முடியாது ராஜபக்ஷர்களிடம் எதிர்பார்ப்பதை போன்று ரணில் விக்கிரமசிங்கமிடம் இருந்து எதிர்பார்ப்பது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏதோ உள் மனதிலே செய்ய வேண்டும் என நினைத்தால் அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தால் ஆக குறைந்தது இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே ஆண்டாண்டாக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாமல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லாத போலியான பொய்யான வாக்குமூலம் பெற்று சிறையில் இன்று வாடிக் கொண்டிருக்கின்ற நம்முடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

அதை செய்து இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீங்களே வந்து மிக கொடூரமான ஒரு சட்டம் என்று சொல்கின்ற நிலையில் அதற்காவது மதிப்பு கொடுங்கள். 2015 இல் உங்களுடைய அரசாங்கம் உலகத்துக்கு சென்று கூறியது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்துவோம் என்று அந்த சட்டத்தை அமல்படுத்துவது யாவது அந்த சட்டத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 11 பேரை கைது செய்தீர்கள். சர்வதேச மட்டத்திலேயே வருகின்ற கடும் அழுத்தத்தினால் ஒரு சிலரை பிணையில் விடுவித்து இருக்கின்றீர்கள்.

அந்த விடயத்திலாவது ஒரு மனசாட்சியை தொட்டு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கைகளை வாபஸ் பெறுங்கள் என்பதை நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ஆக குறைந்தது வேறு ஒன்றும் வேண்டாம். எனில் எமக்குத் தெரியும் நீங்கள் ஒன்றும் செய்யப் போவது இல்லை என்று. எங்களது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் நமது மக்களும் ஏமாறக்கூடாது எதையும் எதிர்பார்க்க வேண்டாம் செய்யப் போவதில்லை இதையாவது செய்யுங்கள்.

நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள் இது ஒரு மிக மோசமான கொடூரமான ஜனநாயக விரோதமான சட்ட ஒழுங்குக்கு மாறான ஒரு சட்ட வரைவு என்பதனை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்ற வகையில் ஆகக் குறைந்தது நடந்த அநியாயம் கடந்த மாதம் நீங்களே அனுமதித்த நீங்களே கூறினீர்கள் நினைவு கூறலாம் என்று அப்படிப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் தொடர்ந்து நீங்கள் பிடிக்கிற தன்மையை நிறுத்துங்கள் பிடித்திருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்தார்.