சி.ஐ.டிக்கு கோட்டை நீதவான் எச்சரிக்கை!

பௌத்த மதம் உட்பட ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான், திறந்த நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் போதகர்  ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணை தொடர்பான முறைப்பாடு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கல்கிசை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தமக்கு விருப்பமான நீதிமன்றத்தை தெரிவு செய்ய முடியாது என கோட்டை நீதவான் திறந்த நீதிமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த முறைப்பாடு இன்று (07) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, ​​சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

அங்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவித்தனர்.

இச்சந்தேக நபருடன் தொடர்புடைய பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இங்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வியொன்றை முன்வைத்த நீதவான், இந்த முறைப்பாடு எவ்வாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது என வினவினார்.

இதற்குப் பதிலளித்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், வேறு ஒரு பொலிஸ் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தனது அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு வழக்கு வேறு நீதிமன்றத்திற்கு எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதவான், உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாவிட்டால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

நீதிமன்ற வலயங்கள் உரிய முறையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி செயற்படுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.