சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

நுவரெலியா – நானுஓயா டெஸ்போட் பகுதியில் கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த போராட்டமானது,  இன்று (25.02.2024) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் தெரிய வருகையில், இப்பகுதியில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஊழல் செய்வதாகவும், குறித்த ஒரு சிலருக்கு மாத்திரம் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாகவும் மற்றும் அதிலும் அவரின் உறவினர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்து இப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

பதாதைகளை ஏந்தி போராட்டம்

இதன்போது, “பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் இதில் உள்ளனர். ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,சிறு நீரக நோயாளிகள் உட்பட பலர் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு எவ்விதமான சமுர்த்தி உதவிகளும் கிடைப்பதில்லை”எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றுதிரண்டு “அரசாங்கத்தால் கிடைக்கும் உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் இன்றி மன உளைச்சலை ஏற்படுத்தாதே, உங்களின் சுயநலன்களுக்காக பொது மக்களின் விளையாடாதே, அதிகாரிகளின் தேவைக்காக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காதே, சுயநலத்துடன் செயற்பட்டு பொது மக்களின் மனங்களை நோகடிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.