அரச ஊழியர்களுக்கு அதிக அதிகாரம்!

தற்போதைய அரச பொறிமுறையில் அரச அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடனும், பிரதேச செயலாளர்களுடனும்  கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின்  தலைமைத்துவம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்த இடத்தில் அனுபவமுள்ள அரச அதிகாரிகள் குழு உள்ளது. அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் தீர்மானங்களையும் திட்டங்களையும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தும் குழு என்றே கூறவேண்டும்.

ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக நாடு இன்று முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகளாகிய நீங்களும் நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்து பெருமைப்படலாம்.

ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகின்றனர். அவர்களுக்கும் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. கிராமத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் உதவி தேவை. வன்முறையற்ற நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அன்று 1971 கிளர்ச்சியின்போது, பிரதேச செயலாளர்கள் வெளியேற வேண்டியிருந்தது. நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் படிப்படியாகத் தீர்க்க ஒரு அரசாங்கமாக நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளோம். இந்த அரச பொறிமுறையில் உங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைகளை உண்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உங்கள் அனைவரது வலிமையும் உறுதியும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.