எரிபொருளால் அதிக இலாபமீட்டும் அரசு!

எரிபொருளின் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு நேற்றைய தினம்(21) கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்தல்
அத்தோடு, டீசல் விலையானது தொழில்துறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என தெரிவித்த அவர், குறைந்தபட்சம் டீசல் விலையையாவது குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகள் இலாபம் ஈட்டக்கூடியவையாக இருப்பதால் அதற்கான நன்மைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதே பொருத்தமானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கைத்தொழில் துறையில் மின்சார பாவனை தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தொழில்கள் பேணப்பட வேண்டும் எனவும் அதற்கு அதிக மின்சார கட்டணம் தடைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.