வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்!

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் அதிகரிக்கப்படாததால், இந்த ஆண்டு (2024) வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில்லை என நிதி அமைச்சு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மித்துள்ளதால், வெளிநாட்டு கையிருப்பை பலப்படுத்தியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அபாய அறிவிப்பு

இதன்படி, அடுத்த ஆண்டு (2025) முதல் வெளிநாட்டு கையிருப்பின் அளவு அதிகரிப்புக்கு ஏற்ப குறிப்பிட்ட வகை வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியமும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எம்.பிக்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய சந்தர்ப்பம்

இதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் மற்றும் வரியில்லா இறக்குமதிக்கான உரிமம் வழங்குமாறு சபாநாயகர் ஊடாக நிதியமைச்சர் என்ற வகையில் அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பன்னிரண்டாயிரத்து ஐநூறு சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு வரியில்லா வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், வரியில்லா வாகன இறக்குமதி உரிமம் வழங்கப்பட்டாலும், வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதால், இந்த உரிமங்களை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடியாது என தெரியவந்துள்ளது.